ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How the WRP Betrayed Trotskyism

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

பகுதி. 1

 

12. The Right-Centrist Leaven of Ultra-Left Downsliding

12. அதிதீவிர இடதின் கீழ்நோக்கிய திருப்பம் வலது-மத்தியவாதத்திற்கு வழியமைத்து கொடுக்கின்றது

டோரி வெற்றிக்கு WRP தலைவர்களின் விடையிறுப்பானது வலதை நோக்கிய ஒரு கட்டாய திருப்பத்தினை தொடங்கி வைத்திருந்ததுடன் இது தொழிற் கட்சி சீர்திருத்தவாதிகளுக்கு மிகவும் வெட்கக்கேடாக ஒத்துழைப்பதில் உச்சத்தை அடைய இருந்தது. இந்த திருப்பம், ISTC அதிகாரத்துவமும் அதன் வலதுசாரி தலைவர் பில் சர்ஸூம் (Bill Sirs) மூன்று மாதகால எஃகு ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்ததற்கு WRP வழங்கிய பகிரங்க ஆதரவில் மிகத் தெளிவான அதன் முதல் வெளிப்பாட்டைக் காட்டியது.

1980 ஜனவரி தொடக்கத்தில் வேலைநிறுத்தம் ஆரம்பமானது. வேலைகள் மீதான டோரியின் தாக்குதலுக்கு எதிரான பொது வேலைநிறுத்த நடவடிக்கையில் WRP ஆரம்பத்தில் தொழிற்சங்கங்களை அணித்திரட்டுவதற்காக பிரச்சாரம் செய்தது. அது சர்ஸ் தலைமையை நோக்கி ஒரு விமர்சன போக்கை எடுத்திருந்தது. ஜனவரி 18, 1980 இல் வெளியான ஒரு முதல் பக்க அறிக்கையில் நியூஸ் லைன் இவ்வாறு குறிப்பிட்டது, “சர்ஸ் மற்றும் அவரின் சக TUC அதிகாரத்துவவாதிகளும், இந்த மோதலின் அரசியல் விளைவுகளைத் தவிர்க்கவும், வேலைநிறுத்தத்தை முற்றிலுமாக தொழிற்சங்க மற்றும் சம்பள பிரச்சினைகளுக்குள் மட்டுப்படுத்துவதற்காகவும் அவர்கள் சாத்தியமான அனைத்தையும் செய்துள்ளனர்...

“டோரிகளுடனும் முதலாளித்துவ அரசுடனும் கட்டமைந்து வந்த மோதல்கள் பற்றி தொழிற்சங்க தலைவர்கள் பீதியடைந்தனர். ஏனென்றால் ஒரு பொது வேலைநிறுத்தமானது உடனடியாக அரசு அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“இதுதான் எஃகு ஆலை வேலைநிறுத்தத்தில் மத்திய பிரச்சினையாக உள்ளது, சீர்திருத்தவாத சமரசமும் அதிகாரத்துவ உபாயங்களும் இதை எந்த விதத்திலும் தீர்க்க முடியாது. இந்த வேலைநிறுத்தம் நெடுகிலும், சர்ஸ் அது பரவுவதைத் தடுக்கவும் அவர் உறுப்பினர்களை வெறுமனே சம்பள உயர்வு கோரிக்கைகளுக்குள் கட்டி வைக்கவும் அவரால் ஆன அனைத்தும் செய்துள்ளார்.”

பத்து நாட்களுக்குப் பின்னர், நியூஸ் லைன் (WRP இன் தொழில்துறை அங்கமான) அனைத்து தொழிற்சங்க கூட்டணியின் (All Trades Unions Alliance) அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அது ISTC தலைவரைக் கடுமையாக கண்டித்திருந்தது: “அவரும் சாப்பேயும் (Chappie) ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கிய நகர்வுகளைத் 'தடுத்ததற்காக' டோரி பத்திரிகை அப்போதிருந்து சர்ஸைப் புகழ்ந்து வருகிறது... “ (ஜனவரி 28, 1980)

ஜனவரி 29, 1980 இல் நியூஸ் லைன் மற்றொரு தொழிற்சங்கத் தலைவர் மீதான கண்டனத்துடன் சேர்த்து சர்ஸ் மீது தாக்குதலைத் தொடுத்தது: “அல்லது 1980 களின் ஆர்தர் ஸ்கார்கில், ஏ. ஜெ. கூக் ஆகியோரின் அரசியலைப் பரிசீலியுங்கள், இவர் [கூக்] 1974 இல் இருந்ததைப் போலவே எஃகு ஆலை வேலைநிறுத்தத்தை டோரிக்களுக்கு எதிரான சம்பளத்திற்கான போராட்டமாக முன்வைக்க வலியுறுத்துகிறார். ஸ்கார்கில் TUC தலைவர்களிடம் அடக்கமான கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கிறார், வேலைகள், சம்பளங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிற்சங்க இயக்கத்தை அணித்திரட்டுவது தான் TUC தலைவர்களின் பொறுப்பு என்றாலும், 1977/78 தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தத்தை இவர்கள் தான் நனவுபூர்வமாக காட்டிக்கொடுத்தனர்”

இந்த அறிக்கைக்குப் பின்னர், நியூஸ் லைன் அரசியல் தொனியில் அங்கே ஒரு புதிரான மாற்றம் இருந்தது. டோரி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை எஃகு ஆலை தொழிலாளர்களின் பின்னால் அணித்திரட்டுவதை சர்ஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தார் என்ற உண்மைக்கு மத்தியிலும், அதற்கடுத்த மாதம், அங்கே சர்ஸ் மீது எந்த விமர்சனமும் வைக்கப்படவில்லை. நியூஸ் லைனின் புதிய வலியுறுத்தல் டோரி வன்முறை அபாயம் மீது நிலை கொண்டிருந்தது. “டோரி வன்முறைக்கு எதிராக ஐக்கியப்படு” என்று தலைப்பிட்டு, பெப்ரவரி 25, 1980 இல் வெளியிடப்பட்ட அரசியல் குழுவின் பிரதான அறிக்கையில், வேலைநிறுத்தத்தின் முதல் வாரங்களின் போது சர்ஸ் மீது கூறப்பட்ட முந்தைய விமர்சனங்களில் ஒன்று கூட மீண்டும் கூறப்படவில்லை. மார்ச் 1, 1980 இல் வெளியான ஒரு நீண்ட ஆசிரியர் குழு அறிக்கையும், ISTC தலைமை மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. சர்ஸின் பெயர் கூட குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இறுதியாக, மார்ச் 6, 1980 இல் நியூஸ் லைன் மிகவும் மிதமான விமர்சன தொனியில், எஃகு ஆலை தொழிற்சங்க தலைவர்கள் பின்வாங்கும் அபாயம் இருப்பதாக அறிவித்தது. அதற்கடுத்த நாள் சம்பளங்கள் மற்றும் வேலை பிரச்சினைகளைத் தனியாக பிரிப்பதன் மீது சில பணிவடக்கமான விமர்சனம் வந்தது.

மார்ச் 8, 1980 பதிப்பு, நியூஸ் லைனின் "முற்றிலும் நேர்மையான செய்தி வெளியீட்டுக்காக" அதை பாராட்டுகின்ற, ISTC இன் ஒரு முழு பக்க விளம்பரத்தை தாங்கி வந்தது.

மார்ச் மாதம் முழுவதும் வேலைநிறுத்தம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், எஃகு ஆலை தொழிலாளர்கள் பின்னே தொழிலாள வர்க்கத்திற்குள் ஆதரவு, குறிப்பாக லிவர்பூல் துறைமுகத் தொழிலாளர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் நியூஸ் லைனின் செய்திகளோ ISTC தலைமையை நோக்கி நடைமுறையளவில் விமர்சனபூர்வமற்று இருந்ததுடன், "சர்ஸ் TUC தலைவர்களைச் செயல்படுமாறு கோரி பகிரங்கமாக அழைப்புவிடுக்க மாட்டார்," என்றவொரு வரியைக் குறிப்பிட்டு மார்ச் 14, 1980 பதிப்பில் வெளியான கருத்துரை போன்ற அவ்வப்போதைய கண்டனத்திற்கு கூடுதலாக எதுவும் வழங்கவில்லை.

சர்ஸ் தலைமை, மார்ச் 31, 1980 இல், ஓர் அற்ப சம்பள தீர்வை ஏற்றுக் கொண்டும், எஃகு தொழில்துறையில் நிச்சயமாக பத்தாயிரக் கணக்கான வேலைகளை அழிக்கும் டோரி முன்மொழிவுகளுடன் இணைந்துகொண்டு, திட்டவட்டமாக அந்த வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தது. ISTC அதிகாரத்துவம் வேலை வேகப்படுத்தல் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் எஃகு நிறுவனத்துடன் ஒத்துழைக்க உடன்பட்டது, இவை தொழில்துறை எங்கிலும் ஒரு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்த இருந்தன. இவ் ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏறக்குறைய உடனடியாக பரவலாக வெளியாயின.

சர்ஸ், "வேலை மறுஒழுங்கு மூலமாக ஏற்கனவே இருக்கும் ஆட்களைக் குறைக்கும்" வரையறை 4(3) மற்றும் "தேவைக்கு அதிகமான செயல்பாட்டு பகுதிகளை" ஆய்வுகுட்படுத்துவதை உறுதியளிக்கும் வரையறை 4(4) ஆகியவற்றை ஏற்றுக் கொண்டார். வரையறை 4(6) உத்தரவாதமான வாராந்த வேலை நாட்களை இல்லாமல் செய்ய கதவைத் திறந்து விட்டது, மற்றும் எஃகு தேவை மேலதிகமாக குறைவது போன்ற வெளிக்காரணிகளை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென வரையறை 5(4)b குறிப்பிட்டது.

இந்த அப்பட்டமான காட்டிக்கொடுப்பு மீதான அதிர்ச்சிதான் WRP தலைமைக்குள் தென்பட்ட முதல் பிரதிபலிப்பாக இருந்தது, அந்த ஏற்பாட்டைப் பகிரங்கமாக கண்டனம் செய்து வந்த எஃகு ஆலை தொழிலாளர்களின் முன்னால் தமது முகத்தை பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 2, 1980 நியூஸ் லைன் பதிப்பு ISTC-BSC உடன்படிக்கையை விற்றுத்தள்ளப்பட்ட ஒன்றாக குறிப்பிட்டதுடன், அதற்கடுத்த நாள் “எஃகுத் துறையில் கோபம் மீண்டும் திரும்புகிறது,” என்று தலைப்பிட்டு வெளியான அலெக்ஸ் மிட்செல் எழுதிய ஒரு முக்கிய கட்டுரை, சம்பள ஒப்பந்தம் பணவீக்க விகிதத்தைக் கூட கருத்தில் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டது.

எனினும், ISTC அதிகாரத்துவம் மீதான இந்த தாக்குதலால் ஹீலி மிகவும் கோபமடைந்தார், வெறும் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் ISTC அதிகாரத்துவம், வேலைநிறுத்த காட்டிக்கொடுப்புக்கான தயாரிப்பில் அது வகித்த பாத்திரம் குறித்து நியூஸ் லைன் விமர்சனமின்றி செய்திகள் வெளியிட்டதற்காக அதன் பாராட்டை தெரிவித்திருந்தது. மற்ற தேசிய பத்திரிகைகளைப் போலவே, நியூஸ் லைனும் ஏப்ரல் 4, 1980 இல் வெளியாகவில்லை. WRP கொள்கையில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை அறிமுகப்படுத்த, ஹீலி, இந்த ஒரு நாள் விடுமுறையை நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஏப்ரல் 5, 1980 சனிக்கிழமை அந்த பத்திரிகை மீண்டும் வெளியானபோது, முதல்பக்க அரசியல் குழு அறிக்கை ஒன்று அந்த வேலைநிறுத்தம் மீதான மதிப்பீட்டில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை அறிவித்தது. தொழிற்சங்க போர்குணம் மீதிருந்த மிட்செலின் மெல்லிய இணைப்பு சட்டென அறுந்து போயிருந்தது. இப்போது சர்ஸின் காட்டிக்கொடுப்புக்கு நியூஸ் லைன் ஒரு பலவீனமான பாதுகாப்பைத் தயாரித்தது:

“மூன்று மாதம் சிரமமான வேலைநிறுத்த நடவடிக்கைக்குப் பின்னர், எஃகு ஆலை தொழிலாளர்கள் அவர்களால் ஆனமட்டும் முற்றிலும் சம்பளங்கள் சம்பந்தப்பட்ட போராட்டத்தை எடுத்திருந்தனர், அதற்கு மேலதிகமாக அங்கே ஒரு சல்லிக்காசு கூட அதிகமாக கிடைக்கவில்லை.

“அவர்கள் அடுத்த கட்ட டோரி அச்சுறுத்தலை — அதாவது, 50,000 வேலைகள் மீதான தாக்குதலை — சந்திக்க வேலைக்குத் திரும்பினார்கள்...

“பொதுக்குழுவில் இருந்த TUC தலைவர்கள் தான் எஃகு ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்தார்கள், ISTC தலைவர்கள் இல்லை. பில் சர்ஸ் தன்னை ஒரு புரட்சியாளராகவோ அல்லது அதுபோன்ற ஒருவராகவோ கூறிக் கொள்ளவில்லை.

“பொருத்தமற்ற பெயர் கொண்ட ‘சோசலிச தொழிலாளர் கட்சி’ இன் அரசியல் வெட்டிப் பேச்சாளர்கள் மற்றும் உளறல் பேர்வழிகளிகளால் வழி நடத்தப்படும் திருத்தல்வாதிகள், இவ்வார முன்பக்கத்தில் 'விற்றுத் தள்ளப்பட்டதாக' குறிப்பிடும் ஒரு தலைப்பைக் கொண்டுள்ளனர். (சோசலிஸ்ட் வேர்க்கர், ஏப்ரல் 5, 1980)

“பில் சர்ஸை வெறுக்கத்தக்கவராக ஆக்க முயற்சிப்பவர்கள் தான், பிரச்சினையை வேண்டுமென்றே குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, எஃகு ஆலை வேலைநிறுத்தத்தின் நிஜமான துஷ்டர்களை —TUC தலைவர்களை— மூடி மறைத்து வருகிறார்கள்.”

இவ்விதமான ஈனத்தனமான குதர்க்கம், முன்னரெல்லாம் ஸ்ராலினிஸ்டுகள் பிரசுரித்த பத்திரிகைகளில் தான் நிறைந்து கிடந்தது, இவர்கள் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்தவர்களுக்கு மன்னிப்பை வழங்குவதிலும் மற்றும் துரோகிகளை விமர்சனம் செய்வோரைக் கண்டிப்பதிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். இப்போதோ, இந்த எதிர்ப்புரட்சிகர கள்ளத்தனம் ஹீலியால் நியூஸ் லைனுக்குள் கடத்தி கொண்டு வரப்பட்டிருந்தது.

13. 1981: The WRP Embraces the Popular Front

13. 1981: தொழிலாளர் புரட்சிக் கட்சி மக்கள் முன்னனியைத் தழுவுகிறது

எஃகு ஆலை தொழிலாளர்கள் மீதான சிடுமூஞ்சித்தனமான காட்டிக்கொடுப்பானது WRP தலைமைகள் முன்னர் தொழிலாள வர்க்கத்திலிருந்து பின்வாங்கியதுடன் பிணைந்திருந்தது, இது 1981 நெடுகிலும் கொள்கைகள் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டதன் மீதிருந்த மறைப்புகளை அகற்றி இருந்தது. சமூக ஜனநாயகத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் நடத்திய கடுமையான அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தை பொறுமையின்றி கைவிட்டிருந்த ஹீலி, இப்போது தொழிலாள இயக்கத்துக்குள் முற்றிலும் சந்தர்ப்பவாத செயல்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்தார். WRP இன் மொத்த வேலைகளும் "அடிமட்ட" மக்கள் இயக்கத்தினுள் ஊடுருவுவதில் ஒருமுனைப்பட்டிருக்கவில்லை — அதாவது, ஒருவர் பின் ஒருவராக இளைஞர்களையும் ஆலை தொழிலாளர்களையும் நியமிப்பதன் மூலமாக மற்றும் அவர்களை கட்சிக் காரியாளர்களாக மாற்றுவதில் ஒருமுனைப்பட்டிருக்கவில்லை, மாறாக "மேலிருந்து" மூலோபாய பதவியிலிருந்த தொழிற் கட்சிவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடையே நட்பை வளர்ப்பதில் ஒருமுனைப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்களை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “மேலோட்டமான பொறுமையின்மை, கட்சியின் செல்வாக்கு படிப்படியாக வளரும் என்பதில் நம்பிக்கையின்மை, ஓர் அமைப்புரீதியான உபாயங்கள் அல்லது தனிப்பட்ட இராஜதந்திரத்தின் உதவியுடன் பெருந்திரளான மக்களை வென்றெடுப்பதற்கான விருப்பம் ஆகியவை சந்தர்ப்பவாதத்தின் உளவியல்ரீதியான மூல ஊற்றுக்களாகும். இதிலிருந்து திரைமறைவு அரசியல் சேர்க்கைகள், மௌனமாக இருக்கும்  கொள்கைகள், வாயடைக்க வைக்கும் சத்தம், சுய-துறவின் கொள்கை, மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் கோஷங்களை ஏற்றுக்கொள்ளும் கொள்கை; இறுதியில், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கு முழுமையாக பாதை அமைப்பது எழுகின்றது.” (மார்க்சிசமும் தொழிற்சங்கங்களும், நியூ பார்க், பக்கம் 74)

சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களிலும், முதலாளித்துவ அரசு எந்திரத்தை திருட்டுத்தனமாக கைப்பற்றி தொழிலாள வர்க்கத்தின் சேவையில் நிறுத்த முடியும் என்ற கருத்துருவை விட மிகவும் அபாயகரமான மற்றும் அரசியல்ரீதியில் ஆபத்தானது வேறொன்றுமில்லை. இந்த பிரச்சினையில் வழி தவறி போயிருந்த முதல் நபர் லஸ்ஸால் (Lassalle) ஆவார், அடுத்தடுத்து ஒவ்வொரு பரிசோதனையும் பெரும் பாதகங்களை மட்டும் உருவாக்கி இருக்கவில்லை, மாறாக நிஜமான குற்றங்களையும் காட்டிக்கொடுப்புகளையும் உருவாக்கி இருந்தது. இப்போது இந்த முட்டாள்தனத்தைக் கையிலெடுத்து முயற்சிக்க ஹீலி தயாராக இருந்தார்.

எஃகு ஆலை வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், லம்பேத்தில் ரெட் நைட் (Ted Knight) எனும் பெயர் கொண்ட ஒரு தொழிற் கட்சி நடவடிக்கையாளருடன் ஹீலி மீண்டும் அவர் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டிருந்தார். இந்த மனிதர் 1960 களின் தொடக்கத்தில் ஹீலியுடன் முன்னர் தொடர்பில் இருந்தவர் என்றாலும், ட்ரொட்ஸ்கிசத்திற்கும் தொழிற் கட்சியில் ஒரு தொழில்முறை வாழ்வுக்கும் இடையே வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்பட்டபோது, அவர் தனது மனசாட்சியின் ஆணைப்படி, (WRP இன் முன்னோடியான) சோசலிச தொழிலாளர் கழகத்துடன் திட்டவட்டமாக உறவைத் துண்டித்துக் கொண்டார். நீண்ட கால தொடர்பின்மைக்குப் பின்னர், இப்போது, அவர்களின் பாதைகள் மீண்டும் சந்தித்துக் கொண்டன. ஒருவர் மற்றவருக்குத் தேவையான ஏதோவொன்றை கொண்டிருப்பதாக அவர்கள் கண்டனர். தொழிற் கட்சிக்குள் முக்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நைட், கென் லிவிங்ஸ்டன் (Ken Livingstone) என்ற பெயர் கொண்ட வளர்ந்து வந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்க "இடது" நபர் ஒருவருடன் நல்ல நட்புறவில் இருந்தார். மறுபுறம், ஹீலி, ஒரு சில அச்சகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், நைட் இற்கு தேவையானால் மிகப் பெரிய எந்திர வளங்களை அவருக்கு வழங்க கூடியவராக இருந்தார். ஒரு பேரம் முடிந்தது. இடது மீதான விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு நைட்டின் அடித்தளத்தை விரிவாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஹீலி அவருக்கு வழங்குவார். “ரெட் டெட்" ("Red Ted") கூறியவாறு, லம்பேத் மற்றும் இலண்டன் மாகாண சபை மூலமாக தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கு மாற்றீடான ஒரு ஒன்றை நைட் ஹீலிக்கு வழங்குவார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்ட நிலையில், அவரின் 70 ஆம் வயதை நெருங்கிக் கொண்டிருந்த ஹீலி, இலண்டனில் சீர்திருத்தவாத இரட்சகர்கள் சிலரின் செல்வாக்குக்காக, கணக்கை முடித்துக் கொள்ள தயாரானார். 1928 இல் புரட்சிகரப் பாதையில் புறப்பட்டு, ஹீலி —அவரே கடந்த காலத்தில் எதிர்த்து போராடி இருந்த மற்றும் அலட்சியம் செய்திருந்த பலரைப் போலவே— இறுதியில் அவரும் நீண்ட பயணத்தின் பிரயோசனமற்ற தன்மையில் நம்பிக்கை கொண்டார். ஒரு குறுக்கு வழி கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது, ஆகவே அவர் ஒரு புதுமையான கருத்தால் ஈர்க்கப்பட்டார்: அதாவது, சோவியத்துகளைக் கொண்டு நாடாளுமன்றத்தைப் பிரதியீடு செய்ய அவரால் தொழிலாள வர்க்கத்தை தயார் செய்ய முடியவில்லை என்றால், ஏன் நாடாளுமன்றவாதிகளை சோவியத் ஆணையாளர்களாக மாற்ற முயற்சிக்கக்கூடாது? என்பது தான் அது.

நைட் உடன் எட்டப்பட்ட பேரம் ஒரு விடயம். அதை கட்சிக்கு விற்றது மற்றொரு விடயம். மும்மூர்த்தி கச்சேரியின் (Three Penny Opera) இந்த அரசியல் பாய்ச்சலை, அவசியமான "இடது ஒலியெழுப்பும்" வார்த்தையாடல்களை கொண்டு நிரப்ப வேண்டியிருந்தது. இதன் வழியிலேயே இதற்காக சமூக சபைகளின் (Community Council) அடிப்படையிலான தொழிலாளர் புரட்சிகர அரசாங்கத்தின் கதைக்கரு மேலெழுந்து வந்தது.

சமூக சபைகளை அடிப்படையாக கொண்ட தொழிலாளர் புரட்சிகர அரசாங்கம், சோவியத்துகளை அடிப்படையாக கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பிரிட்டன்-தயாரிப்பு வடிவமாக, வெறுமனே புதுப்பிக்கப்பட்ட ஒன்றுதான் என்று அடிமட்ட WRP உறுப்பினர்களுக்கு உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட போதினும், முன்னர் அறியப்படாத இவ்விதமான அரசு அதிகார வகைப்பாட்டின் நிஜமான உள்ளடக்கம் முற்றிலும் வேறுவிதமானதாக இருந்தது.

WRP இன் வேலைதிட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்ததைப் போல, சமூக சபைகள் என்பவை பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்திற்கான சுயாதீன அங்கங்களாக இருக்கவில்லை, மாறாக முதலாளித்துவ உள்ளாட்சி அரசாங்கத்தின் அரசியல் துணை அமைப்புகள் கருத்தில் எடுக்கப்பட்டிருந்தன. டோரி நிதியியல் பிழிவுகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே சிக்கிய தொழிற் கட்சி ஆணையாளர்களுக்கு எடுபிடியாக சேவையாற்றுவதே இந்த சபைகளுக்கு WRP ஆல் ஒதுக்கப்பட்ட பிரத்யேக பணிகளாக இருந்தன.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல், சமூக வாழ்வில் தொழிற்சங்கங்கள் செல்வாக்கு கொண்டிருந்த போதினும், இந்த சபைகளை உருவாக்குவதிலும் தலைமை கொடுப்பதிலும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு WRP வெகு குறைவான பாத்திரமே ஒதுக்கி இருந்தது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும். பெப்ரவரி 1981 இல் WRP இன் ஐந்தாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அறிக்கை '81 (Manifesto '81) இவ்வாறு குறிப்பிட்டது:

“தொழிற்சங்கங்கள் தான் சமூக சபைகளின் இதயத்தானத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த சமூக சபைகள் வேலைகளுக்காகவும், வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் மற்றும் வர்த்தகர் சபைகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொறுப்பேற்று அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடும்.” (பக்கம் 8, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)

தொழிலாளர் புரட்சிக் கட்சி விரைவிலேயே, தொழிற்சங்க போராட்டங்களை, நடைமுறையளவில் முழுமையாக, தொழிற் கட்சி செல்வாக்கு கொண்ட உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளின் நலன்களுக்கு, அதாவது பிரிட்டனில் கடந்த 400 ஆண்டுகளாக முதலாளித்துவ அரசு அங்கங்களாக பரிணமித்து வந்துள்ள இவற்றுக்கு அடிபணிய செய்யுமாறு கோர இருந்தது. தொழிற் கட்சியினர் டோரிக்களைச் சார்ந்திருப்பதாக அது இரண்டாண்டுகளுக்கு குறைவான காலத்தில் வலியுறுத்தி கொண்டிருந்த போதினும், தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் தொழிற் கட்சி கட்டுப்பாட்டிலான "உள்ளாட்சி அரசாங்கம்" முக்கிய பாத்திரம் வகிப்பதை இப்போது WRP அலட்சியம் செய்தது. உள்ளாட்சி அரசாங்கத்தின் பெரும்பான்மை ஆசனங்கள் ஒருசமயம் தொழிற் கட்சி ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அதை தொழிலாளர்களினது ஆட்சிக்கான அங்கமாக ஆக்குவது என்பது WRP அபிவிருத்தி செய்த கொள்கையில் தொக்கி நின்ற முற்றிலும் சீர்திருத்தவாத கருத்துருவாகும். இது, இரண்டாம் அகில சகாப்தத்தின் போது பூத்துக் குலுங்கிய "நகரசபை" சோசலிசம் ("municipal" socialism) என்ற பழைய மதிப்பிழந்த கருத்துருக்களுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மேலதிகமாக வேறொன்றுமில்லை, இது தான் இன்று இத்தாலியில் ஸ்ராலினிச மூலோபாயத்தின் மையக்கருவாக விளங்குகிறது.

தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்கத்திடம், அதுவும் காஸ்ட்ரோ போன்ற குட்டி முதலாளித்துவ தீவிர தலைவர்களுக்கும் கூட, கீழ்ப்படுத்துவதை WRP எதிர்த்த அந்நாட்களில் இருந்து அது வெகுதூரம் விலகி சென்றிருந்தது. ஆனால் இப்போதோ அவர்கள் முதலாளித்துவ அரசு அமைப்புகளை ஜனநாயகமயப்படுத்துவதற்கும் மற்றும் அவற்றை தொழிலாள வர்க்க நலனுக்காக பயன்படுத்துவதற்குமான சாத்தியக்கூறைக் குறித்து பெருமைபீற்றினர்.

முக்கியமாக WRP முன்நிறுத்திய சமூக சபைகளின் பாட்டாளி வர்க்கம் அல்லாத அச்சினை புரிந்து கொள்வதில் முக்கியமானது அதன் பின்வரும் கோரிக்கையாகும்:

“சில இடங்களில் ஏறக்குறைய ஒரே இரவில் முளைத்திருந்த தற்போதிருக்கும் உள்ளாட்சி சமூக அமைப்புகளை சமூக சபைகளுடன் இணைக்க வேண்டும் — சான்றாக, பொலிஸ் வன்முறைக்கு எதிரான, இனவாதத்திற்கு எதிரான, மருத்துவமனை மற்றும் பள்ளிமூடல்களுக்கு எதிரான, விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகங்கள் போன்ற உள்ளாட்சி வசதிகளுக்கு செய்யப்படும் வெட்டுக்களுக்கு எதிரான, மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழக கல்விகள் மீதான வெட்டுக்களுக்கு எதிரான சமூக குழுக்கள், வாடகைதாரர்கள் மற்றும் வரி செலுத்துவோர் அமைப்புகள் ஆகியவற்றை.” (அதே ஆவணம், வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)

இவை அனைத்தும் பிரபல்யமானவையாகவும் ஜனநாயகமானவையாகவும் ஒலித்தன என்றாலும், நிஜமான உண்மை என்னவென்றால் அது புரட்சிகர போராட்டத்தின் அச்சை பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் சுயாதீனமான வர்க்க அமைப்புகளிடம் இருந்து விலக்கி, முதலாளித்துவ அரசின் துணை அமைப்புகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகரீதியில் ஒழுங்கமைக்கப்படாத பல்வேறு "உள்ளாட்சி அமைப்புகளுக்கு" மாற்றுவதற்கான ஒரு முயற்சிக்கு நிகராக இருந்தது. தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளி வர்க்க அச்சிலிருந்து விலகிய இந்த விலகல் மக்கள் முன்னணி வர்க்க கூட்டுக்குப் பகிரங்கமாக வக்காலத்துவாங்க நேரடியாக இட்டுச் சென்றது. WRP வலியுறுத்தியது, சமூக சபைகள் "டோரிக்களை எதிர்த்து போராடும் அனைவருக்கும் — அதாவது, உள்ளாட்சி தொழிற் கட்சி குழுக்களுக்கும், தொழிலாளர் இயக்கத்தின் ஏனைய அரசியல் அமைப்புகளுக்கும் மற்றும் மதம், நிறம், தேசியம் பார்க்காமல் மற்றவர்களுக்கும், அவர்கள் ஒருவேளை கடந்த பொது தேர்தலில் தவறுதலாக டோரிக்களுக்கு வாக்களித்து இருந்தாலும் கூட, அவர்களுக்கும் — கதவுகளைத் திறந்து விட வேண்டும். (அதே ஆவணம், வலியுறுத்தல் சேர்க்கபட்டது)

இந்த “ஏனையோர்” என்பவர்களில் முந்தைய டோரி அரசாங்கங்களில் “தவறுதலாக” பதவிகளை வகித்த டோரி "குடியினரையும்", மற்றும் டெட் ஹீத் போன்ற, ஒருவேளை "தவறுதலாக" தொழிற்சங்கங்களை அழிக்க முயன்றவர்களையும் உள்ளடக்கி இருக்குமா என்பது விவரிக்கப்படவில்லை. அது ஹீலியால் "திறந்த கேள்வி" என்ற பக்கத்தில் கைவிடப்பட்டிருந்தது.